இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு
இது ஒரு மகிழ்ச்சியான தருணம். இவரது இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028' உலக அளவில் பிரபலமாகியுள்ளது. உலகம் முழுவதும் வெளியான
கிரிக்கெட் சார்ந்த படங்களில் சிறந்த 5
தருணங்கள் என பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான 'தி கார்டியன்' வெளியிட்டுள்ள
பட்டியலில், வெங்கட்
பிரபுவின் சென்னை-28
திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தைப் பற்றி தி கார்டியனில்,
"காதல், நட்பு
மற்றும் கிரிக்கெட்டைப் பற்றிய வெங்கட்பிரபுவின் இந்த முதல் திரைப்படத்தில், படத்தின் முக்கியப் பாத்திரம் ஒன்று, எதிரணியினரின் பகுதிக்கு குடிபெயர்ந்து செல்லும்
காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்
பட்டியலில் இந்தியாவிலிருந்து 'லகான்' மற்றும் 'சென்னை-28'
ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பது ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான 'தி லேடி வேனிஷஸ்' என்ற
திரைப்படம். ஹிட்ச்காக் படத்தோடு, தன்னுடைய
திரைப்படமும் பட்டியலில் இணைந்திருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக
பகிர்ந்துகொண்டுள்ளார் வெங்கட் பிரபு.
தனது முதல்
படத்திலிருந்தே ரசிகர்களின் முழுமையான வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர்
வெங்கட்பிரபு. ஒரு நடிகராக, பாடகராக
இவர் பெற்ற வெற்றிகளை விட, இயக்குநராக
பெற்ற வெற்றிகள் அதிகம். பெரும்பாலும் இளைஞர் பட்டாளத்தையே தனது ரசிகர் வட்டமாக
வைத்திருக்கும் வெங்கட்பிரபு, அஜித்
குமாரை வைத்து இயக்கிய 'மங்காத்தா'வினால், பன்மடங்கு
அந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டார்.